Pages

Sunday, 9 October 2011

Chicken Ball Curry - சிக்கன் கோலா உருண்டை குழம்பு செய்முறை



பொதுவா மட்டன்-ல கோலா உருண்டை செய்வது வழக்கம். ஆனா சிக்கன்-லயும் செய்து சாப்பிடலாம். உருண்டை பிடிப்பது சிரமம் என்று பலர் எண்ணி விட்டுவிடுவது உண்டு. கொஞ்சம் பொட்டுக்கடலை மாவு சேர்த்துப் பிடித்தா, உருண்டைகள் உடையாமல் கெட்டியாக இருக்கும். சாப்பிட ரொம்ப சாஃப்டாகவும் இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். டேஸ்ட் சும்மா பிச்சிக்கும்.... செஞ்சுதான் பாருங்களேன்......


தேவையான பொருட்கள்:

சிக்கன்(Skinless, Boneless Chicken) - 1/4 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

இஞ்சி பூண்டு விழுது:

இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 10 பல்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பட்டை - 1

சிக்கன் உருண்டைகள் செய்ய:

வெங்காயம் - 1
அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுகடலை - 1/2 கப்
எண்ணெய் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
சோம்பு தூள் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

குழம்பு தாளிக்க:

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு - 1
சோம்பு தூள் - 1 டீ ஸ்பூன்

குழம்பில் சேர்க்க வேண்டிய தூள் வகைகள்:

மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

அரைத்து கொள்ள: (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)

தேங்காய் - 1 சிறிய துண்டு
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்

கடைசியில் சேர்க்க:

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

* வெங்காயம், தக்காளியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இஞ்சி, பூண்டு விழுதினை அரைத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி குழம்பிற்கு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை இஞ்சி, பூண்டு விழுதினை பாதி + வெங்காயம் என்று ஒன்றின்பின் ஒன்றாக சேர்த்து வதக்கி கொள்ளவும்.

* வெங்காயம் சிறிது வதங்கியவுடன் தக்காளியினை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

* புளியினை 2 - 3 கப் தண்ணீ­ர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

* புளி தண்­ணீருடன் குழம்பிற்கு சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கலந்து கொண்டு கடாயில் ஊற்றி கொதிக்கவிடவும்.

* சிக்கனை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

* வெங்காயத்தினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பொட்டுகடலையினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* சிக்கன் + வெங்காயம் + தூள் வகைகள் + அரைத்த பொட்டுகடலை + இஞ்சி-பூண்டு விழுது என அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

* சிக்கன் கலவையினை சிறிது எண்ணெய் தொட்டு சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

* தேங்காய் + கசகசா + சிறிது தண்ணீ­ர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும்.

* புளிகரைசல் நன்றாக கொதித்த பிறகு, தேங்காய் விழுதினை சேர்த்து 3 - 4 நிமிடங்கள் வேகவிடவும்.

* கொதிக்கும் பொழுது, உருட்டி வைத்துள்ள சிக்கன் உருண்டைகளை குழம்பில் ஒவ்வொன்றாக மெதுவாக போடவும்.

* சுமார் 15 நிமிடங்களில் சிக்கன் உருண்டைகள் அனைத்தும் குழம்பில் வெந்து மேலே மிதக்கும்.

* கடைசியில் கொத்தமல்லி தூவி பறிமாறவும்.

* சுவையான எளிதில் செய்ய கூடிய குழம்பு ரெடி.

கவனிக்க:

* புளியினை அதிகம் சேர்க்க வேண்டாம். புளிக்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம்.

* சிக்கன் உருண்டைகள் மிகவும் தண்ணியாக பிடிக்கவரவில்லை என்றால் சிறிது பொட்டுகடலை மாவு சேர்த்து கொள்ளவும்.

* சிக்கன் உருண்டைகளை உருட்டும் பொழுது எண்ணெய் சிறிது தொட்டு கொண்டு உருட்டினால் எளிதில் உருண்டை வரும்.

* குழம்பில் சிக்கன் உருண்டைகளை போடும் பொழுது ஒவ்வொன்றாக எடுத்து போடவும். (பயம் வேண்டாம்..கண்டிப்பாக உருண்டைகள் உடையாது.)

* விரும்பினால் எண்ணெயில் பொரித்தும் உருண்டைகளை குழம்பில் சேர்க்கலாம்.

0 comments:

Post a Comment